by Aswin S
தாவரம் என்று அழைக்கப்படும் ஒரு பெரும் உயிரின பிரிவிற்குள் மரம், செடி, கொடி, புற்கள் பேன்ற நிலைத்திணைகள் அனைத்தும் அடங்கும். ஒர் குறிப்பிட்ட இடத்தில் வளரும் தேவையற்ற தாவரங்கள் “களை” அல்லது “களை செடிகள்” என்று அழைக்கப்படும். இவ்வாறு அழைக்கப்படும் களைகள் நாம் பராமரிக்கும் நிலத்தில் மட்டும் அல்ல, நீரிலும் வளரும். நீர் நிலைகளில் வளரும் இவ்வகை தாவரத்தால் சூரியனின் ஒளி அந்நீர் நிளைகளின் உள் நுழைய முடியாமல் தடுக்கப்படுகின்றன. இவ்வாறு ஆபத்து விளைவிக்கும் களை செடிகள் நம் நாட்டில் உள்ளனவா? பல உள்ளன. இந்தியாவில் ஏறக்குறைய 160 வகையான நீர் களைகள் உள்ளன. அவற்றில் வெங்காயத்தாமரை, வள்ளக்கீரை, சம்பு, ஹார்ன்வார்ட், சால்வினியா, தாமரை, முதலை களை, வேலம்பாசி, வழுக்குப்பாசி, காரா, நிட்டல்லா, நிலை நீர்ப் பூண்டு முதலியன இந்தியாவில் காணப்படும் முதன்மையான நீர் களைகளாகும்.

நீர் களைகளின் வகைகள்
நீர் களைகள் அவை வாழும் இடத்தையும் வளரும் தன்மையையும் வைத்து வகைப்படுத்தப் படுகின்றன. இந்த இரு விதிகளை வைத்து நீர் களைகள்
- நீருக்கடியில் வளரும் களைகள்,
- நீரில் வெளிப்படும் களைகள்,
- கடற்கரை களைகள்,
- ஆற்றங்கரை களைகள் மற்றும்
- சதுப்புநில களைகள் என வகைப்படுத்தப் படுகின்றன.
நம் நாட்டில் வெங்காயத்தாமரை என்று அழைக்கப்படும் நீரில் வெளிப்படும் களை செடியால் 20-25% வரை பயன்பாட்டு நீர் பாதிக்கப்பட்டுள்ளது. அசாம், மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் பீகார் பேன்ற மாநிலங்களில் வெங்காயத்தாமரையால் மட்டுமே 40% வரை பயன்பாட்டு நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
நீர் களைகளின் வளர்ச்சிக்கான காரணம்
நீர் களைகள் விரைவில் ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளும் தன்மை உடையது. நாம் வீட்டில் சுத்தப்படுத்த பயன்படுத்தும் இரசாயனத்தாலும் கழிவுநீர்களாலும் வேறு சில காரணங்களாலும் நீர் நிலைகளில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரசன் என்னும் தாதுப்பொருட்கள் அதிகரிப்பதால் அவற்றை வேகமாக உட்கொண்டு களைச் செடிகள் அளவிற்கு அதிகமாக வளர்கின்றன.
நீர் களைகளின் பாதிப்பு
நீர் களைகள் நீருக்கு மேலும் கீழும் படர்ந்து வளர்ந்தும் நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை விரைந்து உட்கொண்டும் நீரின் தன்மையை கெடுப்பது மட்டுமின்றி அந்நீரில் பிற உயிரினங்கள் வாழ முடியாதவாறு மாற்றிவிடுகின்றன. அதுமட்டுமின்றி அந்நீர் நிளையின் கொள்ளளவை குறைத்து வெள்ளம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன. நீர் களைகளால் நிலத்தடி நீரின் அளவும் பாதிக்கப்படுகின்றன. ஓடும் நீர் நிலைகளில் நீரின் வேகமும் நீரின் பாதைகளும் பாதிக்கப்படுகின்றன.

நீர் களைகளை தடுக்கும் வழிமுறைகள்
- மனிதர்கள் மற்றும் இயந்திரங்களால் அகற்றுதல்
- சூழலியல் மாற்றத்தால் அகற்றுதல்
- இரசாயன பொருட்களால் அகற்றுதல்
- உயிரியல் உதவியால் அகற்றுதல்
ஆகிய வழிகள் மூலம் நீர் களைகளை அகற்றலாம்.
குஜராத் மாநிலத்தில் புஜ் என்று அழைக்கப்படும் பகுதியில் தீசல்சார் என்று ஓர் ஏரி உள்ளது. E.F.I. கடந்த ஒரு சில நாட்களாக இந்த ஏரியில் உள்ள களை செடிகளை அகற்ற செயல்படுகிறது. தீசல்சார் ஏரியில் களை அகற்றும் பணி

இதை போலவே E.F.I. நம் திருநெல்வேலி நகரத்தின் பேட்டை சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பேட்டை முள்ளிகுளம் என்று அழைக்கப்படும் ஏரியில் முறையான அனுமதிகளைப் பெற்று, இயந்திரங்களின் உதவியுடன் படர்ந்து கிடந்த ஆகாய தாமரையை அகற்றி ஏரியின் கரைகளையும் சரிசெய்தது.
அதே திருநெல்வேலியில் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள உடையார்பட்டி ஏரியில் கழிவுநீர் கலப்பதன் காரணத்தால் ஆகாய தாமரை ஏரியை ஆக்ரமித்திருந்தது. தகுந்த நெறிமுறைகளுடன் E.F.I. அவைகளை அகற்றி உடையார்பட்டி ஏரிக்கு புத்துயிர் அளித்தது.


அளவிற்கு அதிகமாக வளர்கின்ற நீர் களைகளை தடுப்பதற்கு அவற்றை அகற்றும் வழிகளை விட அவைகளை வளரும் முன் கட்டுப்படுத்துவதே சிறந்த செயலாகும். அவ்வாறு கட்டுப்படுத்த நாம் அனைவரும் வீட்டில் ஒரு சில மாற்றங்களை செய்தாலே போதுமானது. இந்த மாற்றங்கள் நீர் நிலைகளை பாதுகாத்து அந்நீர் நிளைகளை உங்கள் வருங்கால சந்ததியினருக்கு நீங்கள் விட்டுச் செல்லும் பரிசாக அளிக்கும்.