by Aswin Sankar
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி பயணிக்கும் போது வண்டலூர் உயிரியல் பூங்காவை கடந்த ஓரிரண்டு கிலோமீட்டரில் “கூடுவாஞ்சேரி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற வரவேற்புப் பலகையை காண இயலும். கூடுவாஞ்சேரி என தமிழகம் முழுவதும் அழைக்கப்பட்டாலும் இன்றும் இப்பகுதி வாசிகளும், அரசு ஆவணங்களும் “நந்திவரம்-கூடுவாஞ்சேரி” என்றே குறிப்பிடுகின்றன. இப்பகுதி ஏன் அவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்பதை அறிய நாம் ஓர் சிறு வரலாற்று பயணம் செல்வோம்.
வரலாறு:
நந்திவரம்-கூடுவாஞ்சேரி இன்று பல அடையாளங்களைக் கொண்டிருந்தாலும் 1500 ஆண்டுகளாக இப்பகுதிக்கு அடையாளமாக நின்று கொண்டிருப்பது நந்தீஸ்வரர் கோயில் தான். இக்கோயில் பல்லவ காலத்தில் கட்டப்பட்டது என்றும் அக்காலத்தில் வாணிபக் கூடமாகவும் இருந்ததற்கான ஆதாரங்கள் பல கல்வெட்டுகளில் உள்ளன. இக்கோவிலின் பெயரே மறுவி இப்பகுதிக்கு “நந்திவரம்” என்று பெயர் வரக் காரணமாயிற்று.
பொருளாதார வளர்ச்சி:
நந்திவரம்-கூடுவாஞ்சேரி என்று அழைக்கப்படும் இப்பகுதி தெற்கிலிருந்து சென்னையை வந்தடையும் தேசிய நெடுஞ்சாலை 45யில் (NH45) அமைந்துள்ளதால் இப்பகுதி சென்னையின் நுழைவாயிலாகவே கருதப்படுகிறது. இக்காரணத்தினாலும் சென்னைக்கு மிக அருகில் இருப்பதினாலும் இப்பகுதி குறைந்த காலகட்டத்தில் பொருளாதார அளவில் அசுர வளர்ச்சியை அடைந்தது. கடந்த மூன்று தசாப்தத்தில் இப்பகுதி ஊராட்சியில் இருந்து ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் போன்ற வளர்ச்சிகளைக் கண்டு தற்போது பேரூராட்சியாக உள்ளது.
நந்திவரம் ஏரி:

ஊர் பகுதி நகரத்தின் அருகாமையில் இருந்து அனைத்து வசதிகளை பெற்றிருந்தாலும் தகுந்த நீர் வளம் இல்லையேல் அப்பகுதியின் வளர்ச்சி கேள்விக்குறியாகவே இருக்கும். நந்திவரம்-கூடுவாஞ்சேரி அசுர வளர்ச்சி அடைந்ததற்கு பல காரணங்கள் இருப்பினும் அப்பகுதி பெற்றிருந்த நீர்வளம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. நந்திவரம் ஏரி சுமார் 304 ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட 6.1 கிலோமீட்டர் சுற்றளவுடன் 10 அடி ஆழம் உடையது. இந்த ஏரியின் நீர்வளத்தை சார்ந்தே நந்திவரம், கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம், விஸ்வநாதபுரம், ஊரப்பாக்கம் என பல ஊர்களும் இவ்வூர்களில் இருக்கும் நீர்நிலைகளும் உள்ளன. அருகில் இருக்கும் சிறு நீர் நிலைகளின் வடிகால் நீரும் பருவமழையும் தான் இந்த ஏரியின் நீர்வரத்து காரணம். இந்த ஏரியின் நீர் ஏரிக்கு வழக்கிலிருக்கும் கால்வாய் வழியாக கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், ஆதனூர், மண்ணிவாக்கம் போன்ற ஊர்களை கடந்து முடிச்சூரில் அடையாறுடன் கலக்கிறது.
முந்தைய காலகட்டத்தில் விவசாய நிலங்களாக இருந்த இந்த ஏரியின் வடக்குப்பகுதி இன்று மக்கள் வாழ்விடமாக மாறியிருப்பதால் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீர் பயணிக்க அமைக்கப்பட்ட கால்வாய்கள் சுருக்கப்பட்டும் ஒரு சில இடங்களில் வழி மாற்றப்படும் காணப்படுகின்றன. மக்கள் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதால் ஏரியில் பல களைச்செடிகள் வளர்ந்துள்ளன. அதுமட்டுமின்றி ஏரி பலவருடங்களாக தூர் வாராமல் இருப்பதாலும் தகுந்த நீர் வெளியேற்றம் செய்ய கால்வாய்கள் இல்லாததாலும் ஏரியின் வடக்கில் அமைந்திருக்கும் குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்படுகின்றன.
இவ்வாறான வெள்ள அபாயங்களிலிருந்து மீளவும் பகுதி நிலத்தடி நீரை பாதுகாக்கவும் இந்த ஏரி தூர்வாரி சுத்திகரிப்பு படுத்துவது மட்டுமின்றி ஏரியின் நீர் வெளியேறும் கால்வாய்களும் சரி செய்யப்பட வேண்டும்.