மறதி நம் நாட்டின் அடையாளமாக மாறிவிட்டது. மறதியால் நாம் பெற்றதை விட இழந்ததே அதிகம்
“ஒற்றுமை மறந்தோம்….. சுதந்திரம் இழந்தோம்!!
மொழி பெருமை மறந்தோம்…. இனவுணர்வை இழந்தோம்!!!
ஓட்டின் அருமை மறந்தோம்…. நல்ல தலைமை இழந்தோம்!!!”
அப்படி நாம் மறந்துகொண்டிருக்கும் ஒன்றுதான், நம் வாழ்வாதாரத்திற்காக ஏற்படுத்தப்பட்டு மனித அறிவின் சான்றாகவிளங்கும் ‘குளங்கள்’. அப்படிப்பட்ட, நம் மறதியால் சீரழிக்கப்பட்ட, குளங்களுள் ஒன்றுதான் குமாரசாமி குளம் (அ) முத்தண்ணன் குளம்.
கொங்கு தமிழ் கொஞ்சும் கோவையில்…:
கோவையில் சுமார் 30 குளங்கள் உள்ளன, அவை அனைத்தும் 8 ஆம் மற்றும் 9 ஆம் நூற்றாண்டில் சோழர்களால்கட்டப்பட்டது. இந்தச் செயற்கை குளங்கள் விவசாயத்திற்கு மற்றும் நீர் மேலாண்மைக்கு கட்டப்பட்டவை ஆனால் ஒன்று கூட இன்று உபயோகிக்கும் நிலையில் இல்லை என்பது கவலைக்கிடமான உண்மை.
இதில் குமாரசாமி குளமும் அடக்கம், இது தற்போது கோவையில், தடாகம் சாலையின் அருகிலுள்ளது. குமாரசாமி குளம் (அ) முத்தண்ணன் குளம் என்று அழைக்கப்படும் இக்குளம் கொங்கு தமிழ் உரைத்த நாவுகளை,… வளம் கொழிக்கும் நிலங்களையும் நனைத்த இக்குளம் சாக்கடையாக மாறியது…நம் அலட்சியத்தின் உச்சம்!
வலி தரும் வழிபாடுகள்:
மண்ணினின்று தோன்றியவை அனைத்தும் மண்ணுக்கே திரும்ப வேண்டும் என்பதே இயற்கை நியதி. அவை உயிர்களாயினும் சரி, தண்ணீராயினும் சரி…! அந்நியதியை முறியடிக்கும் மனிதனின் ஆபத்தான முயற்சியின்விளைவுதான், இக்குளங்களின் அழிவு. குமாரசுவாமிக் குளத்தில், பல சிலைகள் கரைக்கப்படுவதால் அதன் நீர்நிலத்தினுள் ஊடுருவாமல் விரிசுதை (plaster of paris) எனும் இரசாயனப் படுக்கை தடுக்கிறது. மேலும் பூசைகளில் மிஞ்சும்குப்பைகளும் இக்குளத்தில் தான் போடப்படுகின்றன. இயற்கையை அழிக்கும் பூசைகளால் எந்தக் கடவுளும்மகிழ்வதில்லை என்பதை நாம் உணர்வது தான் இதற்குத் தீர்வு!!!
அலங்கோலமான சோழர்களின் கைவண்ணம் :
சோழர்களின் ஆட்சி வளமைக்கும் , அறிவுத்தரத்திற்கும் ஒரு சிறு சான்று தான் இக்குளம். இக்குளத்திற்கு நீர் சித்திரைச்சாவடி அரைகட்டுலிருந்து செல்வம்பதி பிறகு நீர் குளத்திலிருந்து வருகிறது. பிறகு இக்குளத்திலிருந்து நீர் செல்வசிந்தாமணி குளத்திற்கு நீர் வழிசெய்யப்பட்டுள்ளது. இக்குளங்களை இனணக்கும் சிறு கால்வாய்களும் பராமரிக்க படாததால் கழிவுநீர் இம்மூன்று குளங்களிலும் கலந்து இவற்றைச் சாக்கடையாக மாற்றிவிட்டது.
பரப்பளவில் 90 ஏக்கர் அமையப்பெற்ற இக்குளம் இன்று 60 ஏக்கர் பரப்பளவாக எஞ்சி நிற்கின்றது…. காரணம் ஆக்கிரமிப்பு! நம் முன்னோர்கள் போல வாழ்ந்து காட்ட முடியவில்லைஎன்றாலும், குறைந்தபட்சம் அவர்கள் அடையாளங்களையாவது நாம் காக்க வேண்டும்.
அலட்சியத்தால் நிகழும் அவலம் :
இந்நீர்நிலை மனிதர்களுக்கு மட்டுமல்ல , பிற உயிரினங்களுக்கும் இவை வாழ்வாதாரமாக உள்ளன.
இவற்றுள் நீர்க்காகம் (Indian Cormorant), மஞ்சள் மூக்கு நாரை (painted stork), கூழைக்கிடா(pelican), புள்ளி மூக்கன் வாத்து (spot billed ducks) மற்றும் மீன், பாம்பு போன்ற பல உயிரினங்கள், இந்நீரில் கலக்கும் சாயத் தொழிற்சாலை கழிவுகளாலும் குடியிருப்புகளின் கழிவுநீராலும் பெரிதும் பாதிக்கப்படுகிறன. மேலும் இங்கு வரும் பறவைகளுக்கு, நெகிழி (plastic) குப்பைகள்விஷமாகவும் வலையாகவும் மாறி பேராபத்தை விளைவிக்கின்றன. பிற உயிர்களும் நாம் காட்டும் அலட்சியமே நம்மனித இனத்தின் அழிவிற்கு வித்தாகும்!!
அழிவின் வேர் தேடி:
சில சிறிய அலட்சியங்களில் தொடங்கி இப்படி விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இப்போராட்டத்தின் வேர் என்ன?!?குற்றவாளியார் ??!…நாம் தான்! பகுத்தறிவிலும், தொழில்நுட்பத்திலும் வளர்ந்து ‘உயர்ந்தோன்’… என மெச்சிக்கொள்ளும்மனிதர்கள் தான். நம் வீடு சுத்தமானால் போதும் என்று கழிவை நீரில் கலக்கும் நீங்கள் தான்!!….
பிறர் பொறுப்பாக இல்லாத போது நமக்கு ஏன் அக்கறை என விலகிப்போகும் நான் தான்!!!…. இயற்கைக்கு இரண்டாம் பச்ச முக்கியத்துவம்தரும் ‘நாம் தான், நம் அலட்சியம் தான்’ .
இனி ஒரு விதி செய்வோம்:
குமாரசுவாமி குளத்தின் இந்நிலை நமக்கொரு அபாய மணியாக ஒலிக்கட்டும்… மாற்றத்தின் வித்தாகட்டும். அலட்சியத்தின் திரையில் சுகமாய் வாழ்ந்தது போதும், வெளிவந்து எதார்த்தத்தைக் காண்போம்;
நாம் இயற்கை மேல்செய்த படையெடுப்புகளைக் கண்டுணர்வோம். இனியொரு விதி செய்வோம்!! குளங்களை கோவில்களுக்கீடெனக் கொள்வோம் குமாரசுவாமி குளம் போன்றவற்றை மீட்டெடுப்போம், இயற்கைக்கு உயிரூட்டுவோம்!!
வறண்ட வருங்காலம் தவிர்க்க நீர் நிலைகளில் களப்பணி ஆற்றுவோம்!
நீர்நிலைகளை பாதுகாப்போம் ! வறண்ட வருங்காலம் தவிர்ப்போம் !
– பா.ரம்யா